போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதானவர் மீது மற்றொரு வழக்கு
போதைப்பொருள் விற்ற வழக்கில் கைதானவர் மீது மற்றொரு வழக்கு
ADDED : ஜூலை 08, 2025 10:41 PM
சென்னை:நைஜீரிய நாட்டு பெண்ணுடன் கூட்டு சேர்ந்து, கோகைன் போதைப்பொருள் விற்ற வழக்கிலும், பிரதீப்குமார் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் பிரதீப்குமார், 38. இவர், கர்நாடகா மாநிலம் பெங்களூரில், மென்பொருள் நிறுவன ஊழியர் போல் தங்கி, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார்.
இவருக்கு, கானா நாட்டை சேர்ந்த ஜான், 38, என்பவருடன், நெருங்கிய தொடர்பு உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கெவின், 35 உள்ளிட்டோருடன் சேர்ந்து, கோகைன், மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை ஜான் விற்று வந்தார்.
அவரையும், அவரது கூட்டாளிகளையும், சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துஉள்ளனர்.
இவர்களில், பிரதீப்குமாரையும், அவருடன் கைதானவர்களையும், போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கானா நாட்டு கும்பலுடன் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி உள்ள, நைஜீரிய நாட்டு பெண் தலைமையில் செயல்படும் கும்பலுடனும், பிரதீப்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்களின் பின்னணியில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பயாஸ் அகமது, 31 இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கோகைன், மெத் ஆம்பெட்டமைன் விற்பனை தொடர்பாக, மற்றொரு வழக்கிலும் பிரதீப்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன், 27ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட, நைஜீரிய நாட்டு பெண் மற்றும் பயாஸ் அகமது ஆகியோரையும், சூளைமேடு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

