ADDED : அக் 23, 2025 12:27 AM

சென்னை: தமிழக அரசு பல்வேறு பெயர்களை மாற்றி வரும் நிலையில், பொது கட்டட விதிகளில், 'நில வகைப்பாடு' என்ற தலைப்பை, 'நில உபயோக மாற்றம்' என்று திருத்தி, மீண்டும் ஒரு பெயர் மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில், சென்னை பெருநகர் பகுதிக்கு மட்டும் முழுமை திட்டம் உள்ளது. பிற நகரங்களில், கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டும் முழுமை திட்டம் உள்ளது.
முழுமை திட்டம் தயாரிக்கும்போது, சம்பந்தப்பட்ட பகுதியில், 'சர்வே' எண் வாரியாக நிலங்களுக்கான வகைப்பாடு வரையறுக்கப்படுகிறது.
ஆதார குடியிருப்பு, வணிகம், தொழில், விவசாயம், பொழுதுபோக்கு, நீர்நிலை என, பல்வேறு தலைப்புகளில் நில வகைப்பாட்டு விபரங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு குறிப்பிட்ட வகைப்பாட்டில் உள்ள நிலத்தை, அதன் உரிமையாளர் வேறு காரணத்துக்கு பயன்படுத்த விரும்பினால், நில வகைப்பாடு மாற்றம் கோரி, சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்கப்படும்.
இதன் அடிப்படையில், தொழில்நுட்ப கமிட்டி ஆய்வு செய்து, நில வகைப்பாடு மாற்றம் குறித்த பரிந்துரையை குழுமத்துக்கு அனுப்பும். குழும கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்நிலையில், பொது கட்டட விதிகளில், நில வகைப்பாடு மாற்றம் என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, நில உபயோக மாற்றம் என்ற புதிய தலைப்பு சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.