ADDED : செப் 19, 2024 12:25 AM

சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் கால்வாய் மற்றும் நடைபாதை அமைப்பதில், 26.61 கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தற்போது தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அவர், அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் கால்வாய் அமைக்க, 290 கோடி ரூபாயிலும்; சாலைகள் சீரமைப்பு மற்றும் நடைபாதைகள் அமைக்க, 246.39 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
அப்போது, மழை நீர் கால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு, நடைபாதைகள் அமைப்பதில், 26.61 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, வேலுமணி, சென்னை மாநகராட்சி செயற் பொறியாளர்கள் முருகன், சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் சின்னசாமி, மண்டல அதிகாரி சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.