சார் - பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
சார் - பதிவாளர் ஆபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
ADDED : செப் 17, 2024 05:51 AM
சென்னை : சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 11.94 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.
பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பரிசு பொருட்கள் குவிக்கின்றன. லஞ்சமும் தலைவிரித்து ஆடுவதாக புகார்கள் எழுந்தன.
அத்துடன் நேற்று, ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த நாள் என்பதால், பத்திரப்பதிவு களைகட்டியது.
இதற்காக, ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக, 150 முன் பதிவு டோக்கன்கள்; 2 சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதிலாக, 300 முன் பதிவு டோக்கன்களும் வழங்கப்பட்டு இருந்தன.
மாநிலம் முழுதும் அதிகளவில் பத்திரப்பதிவு நடந்த நிலையில், அதற்கு ஏற்ப லஞ்சமும் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசார், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி.
கடலுார் மாவட்டம், காடாம்புலியூர்; வேலுார் மாவட்டம், குடியாத்தம்; திருவள்ளூர்; காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சார் - பதிவாளர் அலுவலகங்களில், நேற்று பிற்பகலில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை, இரவு 10:00 மணி வரை நீடித்தது.
இந்த சோதனையில், கணக்கில் வராத, 11.94 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துஉள்ளனர்.