அமைச்சர் பெரியசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர உத்தரவு
அமைச்சர் பெரியசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர உத்தரவு
ADDED : நவ 23, 2024 12:27 AM

சென்னை:வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2006 - 11ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியின் போது, வீட்டுவசதி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, சென்னை திருவான்மியூரில் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ், முதல்வரின் பாதுகாவலர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவி உள்ளிட்டோருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஆட்சி மாறியதும், அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பெரியசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பெரியசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''அமைச்சர் பெரியசாமி தவிர்த்து, மற்றவர்களுக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர, கவர்னர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.
''சபாநாயகர் அனுமதி வழங்கியது தவறு. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, எதிர் தரப்பை கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார்; விசாரணையை, டிசம்பர் 20க்கு தள்ளி வைத்தார்.