ADDED : செப் 03, 2025 12:19 AM
சென்னை:நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
பல்வேறு மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், 68 டிரைவர், 33 பதிவேடு எழுத்தர், 189 அலுவலக உதவியாளர், 85 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, ஊரக வளர்ச்சி துறை உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாயிலாக, வெளியிடப்பட்டு உள்ளது.
ஊரக வளர்ச்சி துறையின் www.tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில், இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இணையதள பக்கத்தில், அது குறித்த எந்த தகவலும் பதிவேற்றம் செய்யப் படவில்லை. இது குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, அரசின் உத்தரவுபடி, காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.