ADDED : ஜூன் 19, 2025 12:41 AM

சென்னை:தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயல்படுத்த, மாநில தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதில், ஒரு தலைமை தகவல் ஆணையர், ஆறு தகவல் ஆணையர் பதவிஇடங்கள் உள்ளன.
இதில், இரண்டு தகவல் ஆணையர்கள் பதவியிடம் காலியானதும், அதற்கான தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, விண்ணப்பங்களை பெற்று தகுதி பட்டியல் தயாரித்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் தலைமையிலான குழுவுக்கு அனுப்பியது.
இக்குழு கடந்த வாரம் கூடி, தகுதியான நபர்களை தேர்வு செய்து, கவர்னர் ரவி ஒப்புதலுக்கு அனுப்பியது. பட்டியலில் இடம் பெற்றிருந்த, வி.பி.ஆர்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமிக்க, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துஉள்ளார்.
தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள, வி.பி.ஆர்.இளம்பரிதி, 47, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜனின் மகன். சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் கூடுதல் பிளீடராக இருந்து வருகிறார்.
தமிழகத்தை சேர்ந்தவரான எம்.நடேசன், பெங்களூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.