ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்
ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்
ADDED : அக் 09, 2024 02:22 AM

சென்னை:''தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 38,698.80 கோடி ரூபாய் முதலீடுக்கான, 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் வழியாக, 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த மாற்றத்திற்கு பின், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகத்திற்கு புதிதாக வர உள்ள தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய தொழில்கள் துவங்க, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தங்களுக்கான மாவட்டத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:
அமைச்சரவை கூட்டத்தில், 38,698.80 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான, 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 46,931 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும். பல்வேறு மாவட்டங்களில் பரவலாக முதலீடுகள் அமைய உள்ளன.
சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட, முதலீடு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
அமைப்பு ரீதியான சலுகைகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் இலக்கை அடைவதுடன், வேலை வாய்ப்பை உருவாக்குவது முக்கியம். படித்த திறன் படைத்தவர்கள் அதிகம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

