தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு
ADDED : ஜூலை 03, 2025 05:05 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் இரண்டாம் ராஜராஜசோழனால், கட்டப்பட்டது. யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிதைந்த நிலையில் உள்ள ராஜகோபுரத்தை சீரமைக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் ராமநிரஞ்சன், கடந்த மாதம் இந்திய தொல்லியல் துறை திருச்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருச்சி சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் ராகுல் போஸ்லோ தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள், கடந்த மாதம் கோவிலை ஆய்வு செய்தனர்.
மேலும், கோவிலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு, கோவில் உட்பிரகாரத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை, 2028 மகாமகத்திற்குள், இந்து சமய அறநிலையத்துறையுடன், இணைந்து கும்பாபிஷேகம் நடத்தவும், அதற்கான பணிகளை 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடித்து தருவதாகவும் அதிகாரிகள் கூறி சென்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுசிந்தகுமார்கர் தலைமையில், திருச்சி சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் ராகுல் போஸ்லோ உள்ளிட்ட குழுவினர் கோவிலில் உள்ள பிரச்னைகள், சீரமைப்பு செய்ய வேண்டியது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோவில் மேம்பாடு பணிகள் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறினர்.
அப்போது, தொல்லியல்துறை அதிகாரிகளிடம், தாராசுரத்தை சேர்ந்த கோபால் அளித்த மனுவில், ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகள் வருவதை தடுக்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழலில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து, காவலாளிகள் நியமிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

