'ஈ.வெ.ரா., பற்றி பேசி ஓட்டு கேட்க தயாரா?': சீமான்
'ஈ.வெ.ரா., பற்றி பேசி ஓட்டு கேட்க தயாரா?': சீமான்
ADDED : ஜன 12, 2025 11:18 PM

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை பொங்கலன்று அறிவிக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அவரது பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை பொங்கலன்று அறிவிப்போம். ஏற்கனவே, ஆறு தேர்தல்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர்.
வள்ளலார், வைகுண்டர் போல ஈ.வெ.ரா., என்ன புரட்சி செய்தார்? ஆதாரத்தை பூட்டி வைத்து, 'ஆதாரத்தை தா' என்றால் எங்கே போவது? ஈ.வெ.ரா., பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?
மண்ணுக்கும், மக்களுக்கும் நல்வாழ்வுக்கும் பாடுபட்ட மக்கள் இருக்கின்றனர். அந்த அடையாளங்களை ஒற்றை முகத்தை வைத்து மூடி மறைக்க பார்க்கிறீர்கள். பெண்ணிய உரிமை, மொழி மீட்பு, ஜாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாவற்றிற்கும் ஆன ஒரே தலைவர் பிரபாகரன்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், நாங்களும் தொடர்ந்து போராடுவோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் அ.தி.மு.க.,வுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.