இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்
இளைஞர்களுடன் வாக்குவாதம் அண்ணாமலை மீது 3 வழக்குகள்
ADDED : ஜன 10, 2024 11:33 PM

பாப்பிரெட்டிப்பட்டி:ஆலயத்தில் மாதா சிலைக்கு, அண்ணாமலை மாலை அணிவிக்க முயன்றபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும், கிராமத்து இளைஞர்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அண்ணாமலை மீது அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். அதில், பி.பள்ளிப்பட்டி லுார்துபுரத்தில், புனித லுார்து அன்னை தேவாலயத்தில் உள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிக்க, அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அண்ணாமலை விளக்கம் கொடுத்தார். பின், மாதா சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கிச் சென்றார்.
இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'அன்னை ஆலயத்துக்கு அண்ணாமலை வந்தபோது, மாதா சிலைக்கு மாலை போட உள்ளூர் இளைஞர்கள் சிலர் அனுமதிக்கவில்லை. இதனால் அண்ணாமலைக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
'அப்போது அண்ணாமலை, 'இந்த கோவில் உங்கள் பெயரில் இருக்கா? எதை வைத்து நீங்கள் தடுக்கிறீர்கள். அதற்கான உரிமை இருக்கா?' என கேட்டார். 'இங்கு வந்து, 10,000 பேருடன் தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள்?' என கேட்டு இளைஞர்களை மிரட்டினார்' என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரத்தை ஏற்படுத்துவது, பொது அமைதியை குலைப்பது, பொது அமைதிக்கு எதிராக பேசுவது என, மூன்று பிரிவுகளில், அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

