ஆரியன்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ஆரியன்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ADDED : டிச 24, 2024 08:01 PM

ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, பாண்டி முடிப்பு எனும் நிச்சயதார்த்த வைபவம் நடந்தது. இதில் கேரள தமிழக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தர்ம சாஸ்தா சபரிமலையில் சன்னியாசியாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், ஆரியங்காவில் கிரகஸ்தனாகவும் அச்சன்கோவிலில்
வன அரசராகவும் அருள்பாலிக்கிறார்.
ஆரியன்காவில் அன்னதானப் பிரபுவான தர்மசாஸ்தா, தன்னில் தன்னை உணர்ந்து, பர பிரம்மமும் ஜீவ பிரம்மமும் ஒன்றே என்று தவ ஞானத்தால் உணர்ந்த புஷ்கலா தேவியின் ஆத்ம பக்தியை மெச்சி அவரை தன்னோடு ஐக்கிய படுத்திக் கொண்டதாக ஐதீகம்.
இவர் சௌராஷ்டிரா குல தேவி என்பதால் இங்கு நடைபெறுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சௌராஷ்டிரா குல முறைப்படியே நடைபெறுகிறது.
திருவாங்கூர் மன்னர் பிரான் மற்றும் தேவஸ்வம் போர்டார் சௌராஷ்டிரா மக்களை சம்பந்தி முறை வைத்து கவுரவிக்கின்றனர்.
இதன் பொருட்டு சௌராஷ்டிரா சமூகத்தினர் ஆரியன்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்கம், மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த தெய்வீக திருமண வைபவத்தை இருவரும் இணைந்து பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
இவ்விழாக்கள் அனைத்தும் காண்பதற்கும் கலந்து கொள்வதற்கும் ஓர் அரிய விழாவாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண உற்சவம் டிசம்பர் 23ல் கேரள மாநிலம் மாம்பழத்துறையில் அம்மனின் ஜோதி ரூப தரிசன வழிபாட்டுடன் துவங்கியது.
'பூரண கும்ப மரியாதை'
ஆரியங்காவில் இன்று டிசம்பர் 24ல் காலை 11:00 அளவில் கோவில் கல் மண்டபம் அருகில் சௌராஷ்டிரா மக்கள், தலைவர்கள் டி.கே. சுப்பிரமணியன், கே.ஆர்.ராகவன் காரியதரிசிகள் எஸ். ஜெ.ராஜன், எஸ்.எஸ்.மோகன் மற்றும் உற்சவதாரர்கள் மற்றும் பல ஊர்களில் இருந்து வந்திருந்த சௌராஷ்டிரா மக்கள் ஒன்று கூடி இருந்தனர்.
கோவில் அட்வைசரி கமிட்டி தலைவர் அருண், காரியதரிசி அனி கண்ணன்,உதவித் தலைவர் திருமதி. சுதா ராஜன் மற்றும் நிர்வாகஸ்தர்கள் கோவில் வாசலில் பூரண கும்ப மரியாதையுடன் சௌராஷ்டிரா மக்களை சம்பந்தி மரியாதையுடன் வரவேற்றனர்.
'பாண்டியன் முடிப்பு பொங்கலா'
புஷ்கலாதேவி பகவானோடு ஜோதி ரூபத்தில் ஐக்கியமாகி, மிக ஆனந்தமாக அம்பாள் வீற்று இருப்பதை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஊர்மக்கள் 'பாண்டியன் முடிப்பு பொங்கலா' எனும் வைபவத்தை நடத்தினர். தமிழக மக்களும் கேரள மக்களும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணி அளவில் 'தாலப்பொலி ஊர்வலம்' எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் பாரம்பரிய உடை அணிந்த மலையாள பெண்கள், குழந்தைகள் குரு தோலை, சுகந்த தூப தீப விளக்குகளை ஏந்தி கலந்து கொண்ட ஓர் அற்புதமான அலங்கார ஊர்வலம் நடைபெற்றது.
பகவான் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு கோவில் நிர்வாக அதிகாரி விஷேஸ், அம்பாள் சார்பில் சங்கத் தலைவர் டி .கே. சுப்பிரமணியன் பிரதிநிதிகளாக இருந்து 'பாண்டியன் முடிப்பு எனும்
நிச்சயதார்த்த பணமுடிப்பை' (வெற்றிலை பாக்கு சொர்ண புஷ்பங்களை) மாற்றிக் கொண்டனர்.
சங்கத்தின் பொதுக் காரியதரிசி எஸ்.ஜெ. ராஜன் அவர்கள் நிச்சயதார்த்த உரையாற்றி, சடங்குகளை நடத்தி வைத்தார். அனைவருக்கும் சொர்ண புஷ்ப மரியாதை பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவாங்கூர் தேவசம் போர்டு டெப்டி கமிஷனர், அசிஸ்டன்ட் தேவசம் கமிஷனர் திரு. மணிகண்டன், அட்வைஸ்ரி கமிட்டி தலைவர் திரு.அருண், காரியதரிசி அனி கண்ணன் மற்றும் கேரள மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பணி கமிட்டி தலைவர் மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கேரள மக்களும் தமிழக மக்களும் இணைந்து கொண்டாடிய இந்த உற்சவங்கள் ஆன்மீக ரீதியில் மக்களின் ஒற்றுமைக்கும் தேச ஒற்றுமைக்கும் அடையாளமாக இருந்தது.
சௌராஷ்ட்ரா சமூக சம்மந்தி மக்களுக்கு தேவசம்போர்டர் மதியம் இரவு என மூன்று நாட்கள் 'சம்மந்தி விருந்து' வழங்கினர்.
நாளை திருக்கல்யாணம்... டிச.,25 அதிகாலை மூலஸ்தானத்தில் பகவானுக்கு சகல அபிஷேகங்களும் நடைபெறும். 9.00 மணிக்கு பொங்கல் படைப்பும், அனைத்து தெய்வங்களுக்கும் வஸ்திர சாத்துபடியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இரவு 7.00 சப்பர புறப்படும், 8.00 திருக்கல்யாண மண்டபத்தில் பகவான் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து சாஸ்திர சம்பிரதாயப்படி திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்க நிர்வாகஸ்தர்களும், திருவாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளும், ஆரியங்காவு திருக்கோவில் அட்வைசரி கமிட்டி நிர்வாகஸ்தர்களும் செய்து வருகின்றனர்.
நிச்சயதார்த்தம்
இரவு 8 மணி மணிக்கு ராஜக்கொட்டார அரங்கில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்றது.