ஆம்ஸ்ட்ராங் வழக்கு : 'பென்டிரை'வில் குற்றப்பத்திரிகை தர எதிர்ப்பு
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : 'பென்டிரை'வில் குற்றப்பத்திரிகை தர எதிர்ப்பு
ADDED : அக் 29, 2024 04:40 AM
சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை, வரும் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரன் உட்பட, 30 பேர் மீது, தனிப்படை போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களில், ரவுடிகள் சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ரவுடி திருவேங்கடம், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி நாகேந்திரன், வேலுார் சிறையில் மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் தவிர, மற்ற 26 பேரும், குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று, 13வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் தர்மபிரபு முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலீஸ் தரப்பில் பக்கம் அதிகம் என்பதால், 'பென்டிரைவ்' வாயிலாக குற்றப்பத்திரிகை நகல் வழங்க முயன்றனர். இதை குற்றவாளிகள் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி வைத்தார்.