குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் விவசாயிகள் இல்லை: எ.வ.வேலு
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் விவசாயிகள் இல்லை: எ.வ.வேலு
ADDED : பிப் 15, 2024 01:58 AM
சென்னை:''திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், விவசாயிகள் கிடையாது; அவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திருவண்ணாமலையில் 'சிப்காட்' தொழில்பேட்டை விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்த, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நியாயமான முறையில் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் மீது, குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டனத்திற்குரியது.
அமைச்சர் எ.வ.வேலு: அ.தி.மு.க., ஆட்சியில் தான், அங்கு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த, அரசு உத்தரவு போடப்பட்டது. நீங்கள் விட்டுச் சென்ற பணியை தொடரவும், இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அக்கறையுடன் அரசு செயல்பட்டது.
ஒன்பது கிராமங்களில் நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், ஏழு கிராம மக்கள் நிலம் தர முன்வந்துள்ளனர். சிலர் துாண்டுதலில், இரண்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில், அந்த பகுதியில் நாள் முழுதும் உழைத்தால் கூட, 300 ரூபாய் கிடைக்காது. 'சிப்காட்' காரணமாக, பெண்கள் மாதம், 20,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
இந்த உண்மை நிலையை அறிந்துதான், அ.தி.மு.க., ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். பணிகள் முழுமை அடையாததால், நாங்கள் இறங்கினோம்.
நிலத்தை கையகப்படுத்துவது, அரசு எடுத்துக் கொள்வதற்கு அல்ல. வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு தான்.
விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது. அங்கு கைது செய்யப்பட்டவர்கள், விவசாயிகள் இல்லை. ஒரு சென்ட் நிலம் கூட, அவர்களுக்கு இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அல்ல.
பச்சைத் துண்டு போட்டு விவசாயிகள் பெயரில் போராட்டம் நடத்தினர். தேவைப்பட்டால், அவர்களின் முகவரியை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

