சிறுமி வன்கொடுமை வழக்கில் அசாம் நபருக்கு இரட்டை 'ஆயுள்' தமிழகத்தை உலுக்கிய சம்பவம்
சிறுமி வன்கொடுமை வழக்கில் அசாம் நபருக்கு இரட்டை 'ஆயுள்' தமிழகத்தை உலுக்கிய சம்பவம்
ADDED : டிச 25, 2025 06:29 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, பள்ளி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை, மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அசாம் வாலிபருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 1.45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஜூலை 12ம் தேதி, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் துாக்கிச்சென்று, மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஆரம்பாக்கம் போலீசார், 13 நாள் தேடலுக்கு பின், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கலே பிஸ்வகர்மா என்ற ராஜு பிஸ்வகர்மா, 35, என்பவரை, ஜூலை 25ல் கைது செய்தனர்.
பின், திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். ஐந்து மாத விசாரணைக்கு பின் நேற்று, நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜு பிஸ்வகர்மாவுக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், 1.45 லட்சம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, போலீசார் அவரை, புழல் சிறையில் அடைத்தனர்.

