ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இடம் தேர்வு செய்து பணிகள் துவங்கும்
ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இடம் தேர்வு செய்து பணிகள் துவங்கும்
ADDED : ஜூன் 27, 2024 03:32 AM
மோகனுார்: ''பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
மோகனுார் தாலுகா, ஆரியூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் பங்கேற்று, 317 பயனாளிகளுக்கு, 1.54 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
மோகனுார் தாலுகாவில், அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளும் பகுதி என்பதால், இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
முன்னாள் முதல்வர் கருணநிதி ஆட்சி காலத்தில், 1997ல் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, நாமக்கல் மாவட்டத்தை தனி வருவாய் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டதிற்கென, ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை உருவாக்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில், 317 பயனாளிகளுக்கு, 1.54 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார்.