வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல்: நாடெங்கும் போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல்: நாடெங்கும் போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
ADDED : நவ 29, 2024 05:27 AM

சென்னை : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாடு முழுதும் போராட்டங்கள் நடத்த, பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, கடந்த ஆகஸ்டில் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ், அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது, வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள், ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடும் கண்டனம்
இதை கண்டித்து, ஹிந்துக்களை திரட்டி போராட்டம் நடத்திய, 'இஸ்கான்' அமைப்பின் துறவி சின்மாய் கிருஷ்ணதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்; ஜாமினும் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிதாரி தலைமையில், பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். அசாம், திரிபுரா மாநிலங்களிலும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
கோல்கட்டாவில் பா.ஜ., நடத்திய போராட்டம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து அவர், 'வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறொரு நாட்டின் விவகாரம்.
நாடு முழுதும்
'எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில், நாங்கள் மத்திய அரசுடன் இருக்கிறோம்' என கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் தாக்கப்படும் பிரச்னையை நாடு முழுதும் கொண்டு செல்ல, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் மாநிலங்களில் நடந்ததுபோல, நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
கூட்டணி மவுனம்
பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாக பேசுகிறார். ஆனால், அண்டை நாடான வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.
இந்த விஷயத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மவுனம் காக்கின்றன.
அதை மக்களிடம் அம்பலப்படுத்தி, நாடு முழுதும் பிரசாரம் செய்ய, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில், எங்களுடன் சங் பரிவார் அமைப்புகளும் இணைந்து செயல்படும்.
இது தொடர்பாக ஆன்மிக, சமூக அமைப்புகளுடன் இணைந்து, நாடெங்கும் முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.