ADDED : செப் 04, 2025 04:27 AM

சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில், ஏதோ ஒரு சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க சென்றபோது, தெரியாமல் அ.தி.மு.க., கூட்டம் பக்கம் வந்த தி.மு.க., காரை மறித்து தாக்கியதாக பொய் பரப்பி வருகின்றனர்.
மாற்றுப் பாதை இருப்பதை காவல் துறை தெரிவித்தும், வேண்டுமென்றே கூட்டத்திற்குள் நுழைந்தது, அந்த தி.மு.க., கார். எந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொன்னார்களோ, அந்த சிறுவன் தான் காரை ஓட்டி வந்தார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு சிறுவனை வைத்து, கூட்டத்திற்குள் காரை விட்டு, விபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? இதையெல்லாம் அறிந்தே, மக்கள் பாதுகாப்பிற்காகவே அ.தி.மு.க.,வினரும், நிர்வாகிகளும் காரை மறித்தனர்.
எந்த அளவிற்கு தில்லுமுல்லு வேலைகளை செய்து, எழுச்சி பயணத்தை முடக்க, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது என்பதற்கு, இதுவும் ஒரு சாட்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

