தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் கமிஷனர் நியமனம்: ரூ.100 கோடி நஷ்ட ஈடு கோரிய வழக்கு
தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் கமிஷனர் நியமனம்: ரூ.100 கோடி நஷ்ட ஈடு கோரிய வழக்கு
ADDED : ஆக 12, 2025 03:34 AM

சென்னை:நுாறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதுாறு கருத்துகள் கூறியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார், 'ஜீ மீடியா கார்ப்பரேஷன்', ஹிந்தி செய்தி தொலைக்காட்சியான 'நியூஸ் நேஷன் நெட்வொர்க்' மீது, 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, கடந்த 2014ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
வழக்கில் சாட்சி விசாரணையை துவக்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். பிரபலமானவர் என்பதால், மாஸ்டர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால், குழப்பங்கள் ஏற்படும்.
எனவே, தன் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்.
அக்டோபர் 20ம் தேதியில் இருந்து டிசம்பர் 10ம் தேதி இடையில், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால், அங்கு வாக்கு மூலம் அளிக்க தயார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டார். தோனி வாக்குமூலம் பதிவு முடிந்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

