UPDATED : ஏப் 05, 2025 07:13 AM
ADDED : ஏப் 05, 2025 12:24 AM

மதுரை: அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் சரக்கு இருப்பு பரிசோதனை இரண்டு ஆண்டுகளாக நடத்தாததால் கூட்டுறவு கடன் சங்கங்கள் நலிவடையும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தணிக்கை துறையும் கூட்டுறவுத் துறையும் ஒன்றாக இருந்த போது கூட்டுறவுத் துறையின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை துறையினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். ஒரே துறையில் இருந்து கொண்டே ஆவணங்களை சரிபார்ப்பது முறையில்லை என்ற காரணத்தால் இரு துறைகளும் தனியாக பிரிக்கப்பட்டது. தணிக்கைத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவுத் துறையில் மார்ச் 31 வரைக்கான சரக்கு இருப்பு பரிசோதனை நடத்தப்பட்டது.
இரண்டாண்டுகளாக கூட்டுறவுத்துறையே ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. தணிக்கை துறையின் கண்காணிப்பு இல்லாத நிலையில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் செய்யும் தவறுகள் வெளியே தெரியாது. நாளடைவில் துறைக்கு சொந்தமான பொருட்கள் இருப்பு குறைவதோடு சங்கங்களும் நலிவடையும் நிலைக்கு செல்லும் என்கிறார் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீத கிருஷ்ணன்.
உண்மையான விவரம் தெரியாது
அவர் கூறியதாவது: தணிக்கை துறை தனியாக பிரிக்கப்பட்டதிலிருந்து மார்ச் 31 அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் சரக்கு இருப்பு பரிசோதனை கூட்டுறவு சட்ட விதிகளின் படி செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டும் இந்தாண்டும் சரக்கு இருப்பு பரிசோதனை செய்ய திட்டமிடப்படவில்லை என தணிக்கை துறை இயக்குநர் கடிதம் வெளியிட்டுள்ளார். இந்த நிலை சங்கங்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு சங்கத்தின் உண்மையான ஆஸ்தி நிலையை அறிய முடியாமல் செய்துவிடும். அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் மார்ச் 31 தேதிக்கான பொருட்கள் இருப்பை சரிபார்க்க வேண்டும். எந்தெந்த நிறுவனங்களின் பெயர்களில் டிராக்டர், வேளாண் கருவிகள் உட்பட என்னென்ன பொருட்கள் உள்ளதென தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு சங்கத்திற்கு சொந்தமான பவர் டில்லர், டிராக்டர் கருவிகள் இருப்பதாக பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு ஆண்டுதோறும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதிவேட்டில் மட்டும் காட்டப்பட்டு டிராக்டர், பவர் டில்லர் காணாமல் போய்விடும். புதிதாக பணியில் சேருபவர்களுக்கு அதுபற்றி எதுவுமே தெரியாமல் சங்கங்களை நலிவடைய செய்து விடும்.
எங்கள் அதிகாரிகளே ஆய்வு செய்தால் உண்மையான விவரம் தெரியாது. ஊழியர்கள் தவறு செய்ததாக அறிக்கை கொடுத்தாலும் விசாரணையும் நேர்மையாக இருக்காது. தணிக்கைத்துறை ஆய்வு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயத்தில் சங்கத்திற்கு சொந்தமான உடைமைகள் பாதுகாக்கப்படும். இதுகுறித்து கூட்டுறவுத்துறை பதிவாளர் நந்தகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.

