கால்நடை பல்கலையில் ரூ.60 லட்சம் முறைகேடு தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு
கால்நடை பல்கலையில் ரூ.60 லட்சம் முறைகேடு தணிக்கை அதிகாரி குற்றச்சாட்டு
ADDED : செப் 02, 2025 11:51 PM
சென்னை:தமிழ்நாடு கால்நடை பல்கலையில், முன்னாள் துணை வேந்தர் செல்வகுமார், இரண்டு அகவிலைப்படி பெற்றதன் வாயிலாக, 60 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், ஐந்து கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த வாரம் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க, பல்கலை சார்பில் மூன்று பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பல்கலையில் மற்றொரு முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், உள்ளாட்சி நிதி தணிக்கை இணை இயக்குநர் கல்பனா, கால்நடை பல்கலையில் தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அவர் முறைகேடு நடந்திருப்பதை கண்டறிந்தார். இது குறித்து பதில் அளிக்கும்படி, பல்கலையின் நிதி அதிகாரிக்கு, கடந்த மே மாதம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
செல்வகுமார், 48 மாதங்கள் துணை வேந்தராக பணி செய்தபோது, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றதற்கான அடிப்படை பென்ஷன், அதற்குரிய அகவிலைப்படி; துணைவேந்தர் பதவிக்கான அடிப்படை சம்பளம் மற்றும் அதற்குரிய அகவிலைப்படி என, இரண்டு அகவிலைப்படிகளை, தன் மாத சம்பளத்தோடு சேர்த்து பெற்றுள்ளார்.
இது தமிழ்நாடு பென்ஷன் சட்ட விதிகளின்படி, பெரிய தவறாகும். பணி ஓய்வு பெற்று, மீண்டும் ஒரு பணியில் தொடருபவர், அதற்கான அகவிலைப்படி பெற தகுதியற்றவர். துணைவேந்தரின் ஓராண்டு பணி நீட்டிப்புக்கான அரசாணை வழங்கப்படாத நிலையில், எப்படி பணி நீட்டிப்பு காலத்தில், சம்பளம், பென்ஷன் மற்றும் இரண்டு அகவிலைப்படிகள் வழங்கப்பட்டன?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலை பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், 'முன்னாள் துணைவேந்தர் செல்வகுமார், துணைவேந்தராக நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்தபோது, விதிகளுக்கு புறம்பாக, இரண்டு அகவிலைப்படி வழங்கியதில், 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்றனர்.