ஆஸ்திரேலிய பாடத்திட்டங்கள் தமிழக கல்லுாரிகளில் அறிமுகம்?
ஆஸ்திரேலிய பாடத்திட்டங்கள் தமிழக கல்லுாரிகளில் அறிமுகம்?
ADDED : அக் 31, 2025 10:26 PM
சென்னை:ஆஸ்திரேலிய நாட்டின் பாடத்திட்டங்களை, தமிழக கல்லுாரிகளில் அறிமுகம் செய்வது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை, மேற்கு ஆஸ்திரேலியாவின் சர்வதேச பல்கலை கல்வி துறை அமைச்சர் டோனி புட்டி, சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான கல்வி, ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் மேம்பட்ட பாடத்திட்டங்களை, தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில் அறிமுகம் செய்வது குறித்து பேசப்பட்டது.
மேலும், தமிழக மாணவர்கள் மேற்படிப்புக்காக, மேற்கு ஆஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்புகளை எளிதாக்குவது குறித்து, ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன், அமைச்சர் செழியன் பேசினார்.
அதேபோல, இரு தரப்பு கல்வி பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, விரிவான செயல் திட்டம் தயாரித்து, அதை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கலாம் என்று, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, உயர்கல்வி துறை செயலர் சங்கர், ஆஸ்திரேலிய துணை துாதர் சிலே ஜாக்கி, மேற்கு ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையர் இயன் மார்டின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

