தாயமங்கலம் கோயில் முன் ஆட்டோ டிரைவர் கொலை டிரைவர் காயம், 3 பேர் கைது
தாயமங்கலம் கோயில் முன் ஆட்டோ டிரைவர் கொலை டிரைவர் காயம், 3 பேர் கைது
ADDED : அக் 23, 2025 12:39 AM

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயில் முன் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மற்றொரு ஆட்டோ டிரைவர் காயமடைந்த நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்தழகு மகன் சங்கர் 29. ஆட்டோ டிரைவர். இவரிடம் இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்த மாதவன் மகன் அன்பு செல்வன் 19, ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தாயமங்கலத்தில் ரோட்டின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை எடுத்த போது காரில் சென்ற சங்கருக்கும் தாயமங்கலத்தை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் 28, என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இரவு 9:15 மணிக்கு சங்கரை அலைபேசியில் தாயமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் முத்துவேல்27, செல்வகுமார் தாயமங்கலத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். சங்கர், அவரது தம்பி சரவணன், அன்புச்செல்வன் ஆகியோர் அங்கு சென்ற போது முத்துவேல்,செல்வக்குமார் உள்ளிட்ட 6 பேர் அவர்களிடம் மீண்டும் வாக்குவாதம் செய்து தாக்கினர்.
முத்துவேல்,செல்வகுமார் வாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அன்புச்செல்வன் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முத்துவேல்,செல்வகுமார்,பிரேம்குமார் 22, ஆகிய 3 பேரை கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
சங்கரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்,கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று அவரது உறவினர்கள் இளையான்குடியில் கண்மாய்கரை அருகே நேற்று காலை 10:00 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் முருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.