ADDED : மார் 05, 2024 05:23 AM
சென்னை : ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத், 'ஆவினில் 100 வகை ஐஸ் கிரீம்கள் உள்ளன. நடப்பாண்டு விற்பனையை, 20 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்று கூறியுள்ள நிலையில், தற்போது சந்தையில் கிடைக்கும், 49 வகை ஐஸ் கிரீம்களிலும், பல வகைகள் கையிருப்பு இல்லை என, தெரியவந்துள்ளது.
ஆவின் வாயிலாக, முந்திரி, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், ஆரஞ்ச், டிரை புரூட், லாங் குல்பி வகை, ஐஸ் கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது, முந்திரி, பாதாம், பிஸ்தா குல்பி மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தலா, 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
'சாக்கோ பார், சாக்கோ பீஸ்ட், மேங்கோ டூயட், கிரேப் டூயட்' ஆகியவை 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. வெண்ணிலா மற்றும் சாக்லேட் கோன் ஐஸ் கிரீம், 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆரஞ்ச், மேங்கோ, கிரேப், ஸ்ட்ராபெர்ரி ஆகிய குச்சி ஐஸ் வகைகள், 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
வெண்ணிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பிஸ்தா, பாதாம், மேங்கோ, ஸ்ட்ரா பெர்ரி ஆகிய வகைகளில், 50 கிராம் 'கப் ஐஸ்' முதல் 1,000 மி.லி., 'பேமிலி பேக்' வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன், கூடுதல் பொருட்களை சேர்த்து, சில வகை ஐஸ் கிரீம்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு ஆவின் வாயிலாக, 49 வகை ஐஸ் கிரீம்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன இந்நிலையில், ஐந்து வகை ஐஸ்கிரீம் விலை சமீபத்தில் உயர்த்தப் பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத், 'ஆவினில், 100 வகை ஐஸ் கிரீம்கள் உள்ளன. நடப்பாண்டு விற்பனையை, 20 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்று கூறியுள்ளார்.
ஆவினில் தயாரிக்கப்படும் 49 வகை ஐஸ் கிரீம்களில் பல வகைகள், கையிருப்பில் இல்லை. சென்னை அம்பத்துாரில் செயல்பட்டு வந்த குல்பி உற்பத்தி பிரிவு, மூடப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக, மதுரையில் இருந்து குல்பி தயாரிக்கப்பட்டு எடுத்து வரப்படுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது, விற்பனையை 20 சதவீதம் எப்படி அதிகரிக்க முடியும் என, ஆவின் சில்லரை விற்பனையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல், பல தகவல்களை, ஆவின் அதிகாரிகள் மறைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

