பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து அறிக்கை ரயில்வே வாரியத்திடம் தாக்கல்
பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து அறிக்கை ரயில்வே வாரியத்திடம் தாக்கல்
ADDED : நவ 05, 2024 02:03 AM
சென்னை: கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்து, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்தி, ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த மாதம், 11ம் தேதி, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு 8:30 மணிக்கு சென்ற போது, பிரதான பாதையிலிருந்து விலகி, 'லுாப் லைன்' எனப்படும் கிளை பாதைக்கு சென்று, அங்கு ஏற்கனவே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், ரயிலின், 13 பெட்டிகள் தடம் புரண்டன: 19 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, கடந்த மாதம் 17, 18ம் தேதிகளில், பாக்மதி ரயிலின் டிரைவர், உதவி டிரைவர், சரக்கு ரயில் ஓட்டுனர், கவரைப்பேட்டையில் பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர், போக்குவரத்து ஆய்வாளர், மூத்த பொறியாளர் என, 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
சிக்னல், இன்டர்லாக்கிங் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தார். விசாரணையை முடித்து, தன் அறிக்கையை நேற்று ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தார். ரயில் விபத்துக்கான காரணம், அதற்கு யார் பொறுப்பு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கை அடிப்படையில், தெற்கு ரயில்வே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ரயில்வே வாரியம் ஓரிரு நாளில் உத்தரவு பிறப்பிக்கலாம்.
இதற்கிடையில், இந்த ரயில் விபத்து குறித்து, கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்தார். நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எஸ்.பி., ஈஸ்வரன் மேற்பார்வையில், மூன்று டி.எஸ்.பி-.,க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள், ரயில் நிலைய மேலாளர், விபத்து நடந்த நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய பகுதிகளில், விபத்து நடந்த நேரத்தில், மொபைல்போன் பயன்படுத்திய சந்தேகத்திற்கு உரிய 200 பேர் பட்டியலையும், ரயில்வே போலீசார் தயாரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே விசாரித்த சிலரை, மீண்டும் அழைத்து மறு விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறினர்.