ADDED : மார் 21, 2025 12:59 AM
சென்னை:அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக கைதான நபருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'பெஞ்சல்' புயல் தாக்கத்தால், கன மழை பெய்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக்கூறி, விழுப்புரம் - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமரச பேச்சு நடத்த, கடந்தாண்டு டிச., 3ல் அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றார்.
அப்போது, அமைச்சர் மீது சிலர் சேறு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக, தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., அருள்தாஸ் அளித்த புகாரின்படி, திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கேட்டு, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

