சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு: போலீசுக்கு ஐகோர்ட் கண்டனம்!
சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு: போலீசுக்கு ஐகோர்ட் கண்டனம்!
UPDATED : ஜன 17, 2025 09:38 PM
ADDED : ஜன 17, 2025 10:46 AM

சென்னை: நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட் , போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது.
நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர் எப்.ஐ.ஆர்., ரத்து செய்யப்பட வேண்டும் எனக்கோரவில்லை. ஜாமின் மட்டுமே கேட்கிறார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை. கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. சில கருத்துகளை தெரிவித்ததற்காக, சிலர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம். போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில், நிலைமை படுமோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் செசன்ஸ் நீதிமன்றங்களும் தலையிட்டு தடுக்கலாம். அதற்கு எளிதாக, ரிமாண்ட் செய்ய மறுக்கலாம். மனுதாரர், ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.
சில கருத்துகளை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்குப் போடுவது என்பது, சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம். இதில் விசாரணை என்பது ஒரு புறம். கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டால் மட்டுமே போலீசார் தலையிட வேண்டும். மற்ற நேரங்களில் தேவையில்லை. இந்த வழக்கில் மனுதாரர் இம்சிக்கப்பட்டு உள்ளார். அவர் இரண்டு முறை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு உதவ முன்வரும் போது, மாநில அரசு அடுத்தடுத்து வழக்குகளை தொடுத்து அதனை தடுத்து வருகிறது. இத்தகைய அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை மதிக்காததை காட்டுகிறது. மனுதாரர் சிறிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளது துரதிர்ஷ்டவசமானது. போலீசாரின் தீய நோக்கம் அனைத்து இடங்களிலும் தெரிகிறது. அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மனுதாரரை( சவுக்கு சங்கர்) ரூ.10 ஆயிரம் சொந்த பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தி ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.