ADDED : ஜூன் 06, 2025 07:21 PM

நபிகள் நாயகம் 08.06.632ல் மரணமடைந்தார். 632 - -634களில் ஆட்சி செய்த கலீபா அபுபக்கர், குர்ஆனை புத்தக வடிவமாக்கினார். 644- - 656களில் ஆட்சி செய்த கலீபா உத்மான், குர்ஆன் புனித நுாலை முழுமைபடுத்தினார்.
ஹதீஸ் அல்லது ஹதீத் என்பது நபிகள் நாயகத்தின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள் மற்றும் விமர்சன பதிவுகளை உள்ளடக்கிய தொகுதி ஆகும்.
நபிகள் நாயகம் இறந்து, 200 ஆண்டுகள் கழித்து, ஹதீத்கள் தொகுக்கப்பட்டன. மொத்த நபிமொழிகளின் எண்ணிக்கை, 7 லட்சம். மார்க்க அறிஞர்கள் அந்த நபிமொழிகளின் நம்பகத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதிகாரப்பூர்வமாய் 10,000 ஹதீஸ்களை அங்கீகரித்தனர்.
நான்கு வகையான ஹதீஸ்கள் உள்ளன.
1) சஹி (நம்பகத்தன்மை வாய்ந்தவை)
2) ஹசன் (நல்ல ஹதீத்)
3) டாயிப் (பலவீனமான)
4) மவ்ழூ (இட்டுக்கட்டுப்பட்ட) ஹதீஸ்கள் மூன்று அடுக்குகளில் சோதிக்கப்பட்டன.
மூலத்தை ஆராய்தல்
மூலத்தின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தல்
பிற மூலங்களை ஒப்பிட்டு உறுதி செய்தல்.
ஆயிஷா நாச்சியார் 2,210 ஹதீஸ்களை விவரித்துள்ளார். அவற்றில் நபிகள் நாயகத்தின் அந்தரங்க வாழ்க்கை, ஆன்மிகப்பயணம், வணக்க வழிபாடு, மரபுரிமம் மற்றும் அறுதி விளைவியல் பற்றிய செய்திகள் பொங்கி வழிந்தன.
ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், அபுதாவுத், திரிமிதி, தசாய் மற்றும் இப்னு மாஜாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
நம்பகமான ஹதீஸ்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இஷாக் பின் ராவியா, அல் ஹமீதி, இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் முதலியோர் முழுமையாக ஈடுபட்டனர்.
நபிகள் நாயகம் நடை, உடை பாவனை, உணவு, பேச்சு, செயல், திருமண வாழ்க்கை அனைத்திலும், ஒரு நடமாடும் குர்ஆனாக திகழ்ந்தார்.
பெரும்பாலான முஸ்லிம்கள் திருக்குர்ஆனையும் ஹதீஸையும் இரு கண்களாக பாவிக்கின்றனர். ஆனால், சில உட்பிரிவினர், ஹதீஸுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம், நபித்துவம் பெற்ற 23 ஆண்டுகளில் மனித வாழ்வின் ஒவ்வொரு நகர்வை பற்றியும், துலாக்கோல் மதிப்பீடுகளை, நுண்ணியமாக ஹதீஸ் மூலம் வழங்கியுள்ளார். ஹதீஸ்கள், செய் / செய்யாதே கட்டளைகளின் கலைக்களஞ்சியம்.
'அவரவர் மதம் அவரவருக்கு'- இது ஒரு ஹதீஸ்.
- அலிமா