நிதி நெருக்கடி ரேஷனில் பருப்பு, பாமாயில் நிறுத்தம்?
நிதி நெருக்கடி ரேஷனில் பருப்பு, பாமாயில் நிறுத்தம்?
ADDED : ஜன 11, 2024 10:23 PM

சென்னை:கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2007 முதல் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
கடந்த, 2008ல் உளுத்தம் பருப்பு வினியோகம் நிறுத்தப்பட்டது. துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பு வழங்கப்படுகிறது. அதை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைக்கு வினியோகம் செய்கிறது. அதன்படி, ரேஷனில் வழங்க மாதம், 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி லிட்டர் பாமாயில் தேவை. அவை, 'டெண்டர்' கோரி, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் தலா, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது; இதுவரை, அதை நிறைவேற்றவில்லை.
இதற்கிடையில், பருப்பு கொள்முதலில், விலை ஏற்ற, இறக்கம் பிரச்னையாக இருப்பதுடன், தமிழக அரசும் நிதி நெருக்கடியில் உள்ளது. பருப்பு, பாமாயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் ஒப்புதல் அளிப்பதிலும் நிதித் துறையும் தாமதம் செய்கிறது.
பருப்புக்கான டெண்டர் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருவதால், கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் பருப்பு, பாமாயில் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால், கார்டுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நிதி நெருக்கடியால், பருப்பு, பாமாயில் வழங்கும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை நிறுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு பதிலாக, அதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்று, அதிகாரிகளும் பணியாளர்களும் யோசனை தெரிவித்துள்ளனர்.
அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளுக்கு, பருப்பு, பாமாயில் உட்பட அனைத்து பொருட்களையும் முழுதுமாக அனுப்புவதில்லை. அதற்கு ஏற்ப, கார்டுதார்களுக்கு வந்த பொருட்கள் மட்டும் வழங்கப்படுகின்றன.
எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறையாக, தேவையான அளவு கொள்முதல் செய்தாலே பிரச்னைகளை தவிர்த்து விடலாம்.
ஒவ்வொரு மாதமும் தட்டுப்பாடின்றி வினியோகிக்க, மாத கடைசியில் ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் என, அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும். அப்போது தான், மாத துவக்கத்தில் ரேஷன் கடைகளிலும் அனைத்து பொருட்களும் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

