பந்தல் அகற்றம்: 616 சாம்சங் தொழிலாளர்கள் கைது அரசின் நிலைப்பாட்டை ஏற்க சி.ஐ.டி.யு.,க்கு அறிவுரை
பந்தல் அகற்றம்: 616 சாம்சங் தொழிலாளர்கள் கைது அரசின் நிலைப்பாட்டை ஏற்க சி.ஐ.டி.யு.,க்கு அறிவுரை
ADDED : அக் 10, 2024 01:15 AM

சென்னை:சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற616 தொழிலாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம், போராட்டம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, இரு தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணிபுரியும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடன்பாடு ஏற்படவில்லை
இதை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் அடங்கிய குழு, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இரு தினங்களுக்கு முன், 10 மணி நேரம் பேச்சு நடந்தது.
அதில், ஊதியத்தை 5,000 ரூபாய் உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஒரு பிரிவு ஊழியர்கள் ஏற்றனர். ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கோரியதை ஏற்க முடியாது என, சாம்சங் நிர்வாகம் தெரிவித்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வந்தவுடன் அதன்படி அரசு செயல்படும் என அமைச்சர்கள் உறுதி தெரிவித்தனர்.
இதை ஏற்காமல், சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, சாம்சங் நிறுவன சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் முத்துகுமார் தெரிவித்தார். நேற்று முன்தினம், போராட்டத்திற்கு சாம்சங் தொழிலாளர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
போலீசாரின் கெடுபிடியால் தான் விபத்து ஏற்பட்டதாகக் கூறி, அவர்களுடன் சில தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன், தொழிலாளர்களால் கீழே தள்ளி விடப்பட்டார். இதையடுத்து, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடம் தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி, பந்தலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.
மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக, ராஜபூபதி, 27, ஆசிக் அகமது, 33, பாலாஜி, 32, சண்முகம், 27, மோகன்ராஜ், 30, ஆனந்தன், 31, சிவநேசன், 30, ஆகியோர் மீது வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
போலீசார் குவிப்பு
நேற்று காலை, பந்தல் அகற்றப்பட்ட அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
நீண்ட நேர பேச்சுக்குப் பின், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் உட்பட 616 பேரை போலீசார் கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள இரு மண்டபங்களில் தங்க வைத்தனர்.
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக, எலன், 28, சூர்யபிரகாஷ், 26, இருவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
நேற்று காலை போராட்டத்தில், 600க்கும் மேற்பட்டசாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தயாநிதி, 28, மணிமாறன், 25, ஆகிய இருவர் திடீரென மயக்கம் அடைந்தனர். சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடக்குமுறையால் ஒடுக்க முயல்வதா?
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து, நாள் விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். குற்றங்கள் செய்தவர்களை பிடிப்பதில் தி.மு.க., அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைக்கு போராடும் சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?
பழனிசாமி
அ.தி.மு.க., பொதுச்செயலர்.
வேறு மாநிலத்திற்கு சாம்சங் போகாது!
சாம்சங் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுகிறது.
தங்கம் தென்னரசு
நிதித்துறை அமைச்சர்