வழக்கறிஞர்கள் விளம்பரம் செய்தால் நடவடிக்கை: பார் கவுன்சில் எச்சரிக்கை
வழக்கறிஞர்கள் விளம்பரம் செய்தால் நடவடிக்கை: பார் கவுன்சில் எச்சரிக்கை
ADDED : மே 02, 2025 08:33 PM
சென்னை:'வழக்கறிஞர்கள் பொது இடங்கள் மற்றும் சமூக வலை தளங்களில், நேரடியாகவும், மறைமுகமாகவும் விளம்பரம் வெளியிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியதாவது:
வழக்கறிஞர்கள் விளம்பரங்களை வெளியிடுவது, பார் கவுன்சில் விதி, 36ன்படி சட்டவிரோதமானது.
வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போஸ்டர், பேனர், சமூக வலைதளங்களில், எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது. பிறந்த நாள் விளம்பரம் கூட, வழக்கறிஞர்கள் வெளியிடக்கூடாது.
சமூக வலைதளங்களில் ஒரே நாளில் உத்தரவு வாங்கி தரப்படும் எனக்கூறி, பலரிடம் பெரும் தொகை பெற்று ஏமாற்றப்படுவது குறித்து, பார் கவுன்சிலுக்கு புகார்கள் வந்துள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், வலைதளங்களில் நீக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீறி விளம்பரம் வெளியிட்டால், வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும்.
அதேநேரம், சட்டம் குறித்து, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, வழக்கறிஞர்களுக்கு எவ்வித தடையும் இல்லை. நிலம் தொடர்பான வழக்குகளில் கூட, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் பெயர் குறிப்பிடுவதும் விளம்பரம் தான். அதுவும் சட்டவிரோதமானது.
வழக்கறிஞர்கள் விளம்பரம் வெளியிடுவது தொடர்பாக, பொதுமக்கள் பார் கவுன்சில் இணையதளம் வாயிலாக புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த, 2017 முதல் இதுவரை பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.