மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு; சாந்தப்படுத்திய பாகனங்கள்
மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு; சாந்தப்படுத்திய பாகனங்கள்
ADDED : மார் 05, 2024 07:21 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, லாரியில் இருந்து இறங்கி மிரண்டு ஓடிய யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ளது கண்ணாடி என்ற பகுதி. இங்கு, வடக்குமுறி என்ற இடத்தில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் திருவிழாவுக்கு லாரியில் யானை அழைத்து வரப்பட்டது. கோழிக்கோடு அக்கரைமேல் பகுதியில் உள்ள 'சேகரன்' என்ற யானை திடீரென லாரியில் இருந்து இறங்கி மிரண்டு ஓடியது.
யானை மிரண்டு ஓடிய போது, வயல்களில் ஆடு மேய்க்க வந்த பழநியை சேர்ந்த கந்தசாமி என்பவரை தாக்கியது. படுகாயமடைந்த கந்தசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள், இரு கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது. யானை மிதித்ததில் மூன்று மாடுகள் இறந்தன.
தொடர்ந்து, 8 கி.மீ., தூரம் ஓடிய யானை, மாத்துார் அம்பாட்டு என்னுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் நின்றது. தகவல் அறிந்து வந்த போலீசார், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்படுத்தினர்.
அங்கு வந்த, பாகன்கள் நீண்ட நேரம் முயற்சித்து யானையை சமாதானப்படுத்தி மரத்தில் கட்டினர். அதன்பின், லாரியில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனால், நான்கு மணி நேரம் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டாம்பி பகுதியில் திருவிழாவுக்கு அழைத்து வந்த யானை, பாலக்காடு அருகே மற்றொரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அழைத்து சென்ற போது லாரியில் இருந்து இறங்கி மிரண்டு ஓடியது.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின், பாகன்கள் முயற்சியால் யானையை சாந்தப்படுத்த முடிந்தது. இச்சம்பவத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு, தக்க நஷ்டஈடு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினார்.

