இளையராஜாவுக்கு பாரத ரத்னா: பாராட்டு விழாவில் முதல்வர் கோரிக்கை
இளையராஜாவுக்கு பாரத ரத்னா: பாராட்டு விழாவில் முதல்வர் கோரிக்கை
UPDATED : செப் 14, 2025 04:22 PM
ADDED : செப் 14, 2025 06:25 AM

சென்னை: ''இளையராஜாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கி, 50 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' என்ற பெயரில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
எல்லை கடந்தவர்
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாராட்டும், புகழும் இளையராஜாவுக்கு புதிதல்ல. அவரை பாராட்டுவதில், நாம் தான் பெருமை அடைகிறோம். அவர் திரையுலக பயணத்தை துவங்கி, 50 ஆண்டுகள் ஆகின்றன. நம் இதயங்களை ஆளத் துவங்கி அரை நுாற்றாண்டாகிறது.
திறமையும், உழைப்பும் இருந்தால், எப்படிப்பட்ட உயரத்தையும் அடையலாம் என்பதற்கு, இளையராஜா எடுத்துக்காட்டு. இந்த அரை நுாற்றாண்டு காலத்தில், அவரது பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழகத்தில் இருக்க முடியாது. அவரது பாடல்களை மனதில் நிறுத்தி, தங்கள் இன்ப, துன்பங்களை பொருத்திப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது.
இளையராஜாவின் இசை, தாயாக தாலாட்டுகிறது; காதலின் உணர்வுகளைப் போற்றுகிறது; வெற்றிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது; வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல; இணையற்ற ராஜா.
ஒரு ராஜா இருந்தால், அவருக்கென நாடு இருக்கும்; மக்கள் இருப்பர்; எல்லை இருக்கும். ஆனால், இந்த ராஜா மொழிகளை, நாடு களை, எல்லைகளை கடந்தவர்; எல்லா மக்களுக்குமானவர்.
தமிழ்ச்சுவை
திரையிசையை கடந்த இளையராஜாவின் இசை அவரது திறனை, வீச்சை, ஆழத்தை, உயரத்தை எடுத்துச் சொல்லும். 'இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால், திருக்குறளும், நற்றிணையும், புறநானுாறும், குறுந்தொகையும், ஐங்குறுநுாறும், பதிற்றுப்பத்தும், பரிபாடலும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும்' என, சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.
சங்கத் தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு இளையராஜா இசையமைத்து, சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும். எந்த விஷயத்துக்கும், முதல்வரிடம் தான் கோரிக்கை வைப்பர்; ஆனால், முதல்வரான நான் தமிழக மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன். இசை ஆளுமையும், தமிழ் புலமையும் கொண்ட அவர், இந்த கடமையை செய்ய வேண்டும்.
ஏற்கனவே, தமிழ் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜா இசை வாயிலாக, தமிழ்ச்சுவை அடுத்தடுத்த தலைமுறைக்கு பரிமாறப்பட வேண்டும். இசையால், நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண் என, எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், கருணாநிதி வழங்கிய, 'இசை ஞானி' பட்டம் அவருடன் நிலைத்து விட்டது.
சாதாரணம்
இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
இளையராஜாவின் சாதனைக்கு எந்த மகுடம் சூட்டினாலும், அது சாதாரணம்தான். அப்படிப்பட்ட மேதைக்கு, இந்தியாவின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
நாம் அனைவரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம் எல்லாரையும் தாலாட்டி கொண்டிருக்கிற இசை தாய் தான் இளையராஜா. அவரின் பாடல் இல்லாமல், எந்த குழந்தைக்கும் தாலாட்டில்லை. வயல்வெளி, டீக்கடை, திருவிழா, திருமணம், ஆட்டோ, பஸ் இப்படி எல்லா இடத்திலும் நிறைந்திருக்க கூடிய ஒரே இசைஞானி இளையராஜா தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ரஜினி பேசியதாவது:
அதிசய மனிதர்களை பற்றி புராணத்தில், இதிகாசத்தில் படித்திருக்கிறேன். நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. அவரை நான், 'சுவாமி' என்றுதான் அழைப்பேன்.
உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி நரம்பில் இளையராஜா இசை ஊறிப் போயியுள்ளது. 1970, 1980களில் அவர் இசையமைத்த பாடல்கள், இன்றும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன.
சிம்பொனி இசையமைத்த இளையராஜாவுக்கு ஈடு இணை யாரும் இல்லை. இளையராஜா சுயசரிதை படம் விரைவில் வர வேண்டும். அதற்கு நானே திரைக்கதை எழுத தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் கமல், இளையராஜாவை வாழ்த்தி பாடல் பாடினார்.
விழா துளிகள்...
* தமிழக அரசின் சார்பில், இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அவர் இசை அமைத்த திரைப்பட பாடல்கள், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன
*ரஜினி, கமல் மற்றும் துணை முதல்வர் உதயநிதி நடித்த திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது, நடிகரும் எம்.பி.,யுமான கமல் எழுந்து, ''விழாவில் பாடப்படும் பாடல்கள், முதல்வர் கொடுத்த பட்டியல்,'' என்றார்
* இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசை, மீண்டும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1:30 மணி நேரம் வரை சிம்பொனி இசை இசைக்கப்பட்டது. 87 பேர் அடங்கிய சிம்பொனி குழுவுக்கு அனைவரும் எழுந்து நின்று, கைகளை தட்டி பாராட்டினர்
*விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு, ஆர்மோனியம் இசைக்கருவியுடன் இளையராஜா அமர்ந்திருக்கும் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.