பழனிசாமிக்கு எதிராக பாரதி வழக்கு: கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை
பழனிசாமிக்கு எதிராக பாரதி வழக்கு: கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை
ADDED : டிச 18, 2024 02:54 AM
சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவரை தி.மு.க.,வுடன் தொடர்புபடுத்தி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதை எதிர்த்து, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை, 'மாஸ்டர்' கோர்ட்டுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதோடு, போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறுவதாகவும், போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, தி.மு.க., வில் அங்கீகாரம் அளித்ததாகவும், சமூக வலைதளத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமிக்கு எதிராக, தி.மு.க., சார்பில், அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'உள்நோக்கத்துடன், கட்சியை அவதுாறு செய்யும் விதத்தில் கருத்துகளை பதிவிட்ட பழனிசாமி, இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
ஜாபர் சாதிக் எதிரான குற்றச்சாட்டுக்களை, தி.மு.க.,வோடு தொடர்புபடுத்தி பேச, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'போதைப் பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர், தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்றும், பின், அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும், மனுதாரரே தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயம் கருதி, நான் கருத்து தெரிவிக்கவில்லை; பொது நலன் கருதியே தெரிவித்தேன்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சி விசாரணையை பதிவு செய்ய, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதி உத்தரவிட்டார்.