பழனிசாமிக்கு முழு அதிகாரம்; நகைச்சுவை என்கிறார் பாரதி
பழனிசாமிக்கு முழு அதிகாரம்; நகைச்சுவை என்கிறார் பாரதி
UPDATED : டிச 11, 2025 08:14 AM
ADDED : டிச 11, 2025 03:45 AM
சென்னை: ''அமித் ஷா மீதான பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட 'மேக் -அப்'தான் அ.தி.மு.க., பொதுக்குழு,'' என தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
'கூட்டணி க்கு அ.தி.மு.க., தான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு முழு அதிகாரம்' என்ற அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானம், பார்ப்பதற்கு பழனிசாமியை அ.தி.மு.க.,வினர் மத்தியில் 'டான்?' போல காட்டுமே தவிர, அவர் 'டம்மி' என்பது மக்களுக்கும் பா.ஜ.,வுக்கும் நன்றாகவே தெரியும்.
அ.தி.மு. க., பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புகூட குஜராத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பீஹாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும்' என்றார். 'மாப்பிள்ளை அவர்தான், ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.
ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித் ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அ.தி.மு.க., பொதுக்குழுவில், 'அதிகாரம்' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கின்றனர்.
அமித் ஷா சொல்வதை மீறி, எதையுமே பழனிசாமியால் செய்ய முடியாது என்பது, மக்களுக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க. ,வினருக்கும் நன்கு தெரியும்.
அமித் ஷா மீதான பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட 'மேக் -அப்'தான் அ.தி.மு.க., பொதுக்குழு.
வலுவான கூட்டணி அமைப்பதாக கூறிய பழனிசாமியை நம்பி, எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித் ஷா, பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள்.
அதற்காக அமித் ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத பழனிசாமிக்குதான், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

