கூட்டத்திற்கு அவைத்தலைவர் வந்தும் தற்காலிக தலைவராக முனுசாமி தேர்வு
கூட்டத்திற்கு அவைத்தலைவர் வந்தும் தற்காலிக தலைவராக முனுசாமி தேர்வு
ADDED : டிச 11, 2025 03:45 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வந்தபோதும், தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு, கட்சி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், பொதுக்குழுவில் பங்கேற்க, சக்கர நாற்காலியில், கூட்டம் நடந்த மண்டபத்திற்கு வந்தார்.
ஆனால், அவர் மேடைக்கு வரவில்லை. பொதுக்குழு துவங்கும் முன் பேசிய, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ''கட்சி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
' 'எனவே, கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக முனுசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தி தர வேண்டும்,'' என்றார்.
இந்த தீர்மானத்தை, பொரு ளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து முனுசாமிக்கு, பூங்கொத்து கொடுத்து பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் முனுசாமி தலைமையில், செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சில மாதங்களாக, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன், கடந்த மாதம் நடந்த, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கு, சக்கர நாற்காலியில் வந்திருந்தார்.
அதுபோல், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கும் சக்கர நாற்காலியில் வந்திருந்தார்.
ஆனாலும், அவருக்கு பதிலாக, தற்காலிக அவைத் தலைவராக முனுசாமி தேர்வு செய்யப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இது அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்திற்கு, அவைத் தலைவர் வராமல் இருந்திருந்தால், தற்காலிக அவைத் தலைவரை தேர்வு செய்திருக்கலாம்.
அ வர் வந்த நிலையில், அ வரை வைத்தே கூட்டத்தை நடத்தி இருக்கலாம் என, கட்சி நிர்வாகிக ள் சிலர் தெரிவித்தனர்.

