மட்டன் பிரியாணி; வஞ்சிரம் வறுவல் பொதுக்குழுவில் கமகம விருந்து
மட்டன் பிரியாணி; வஞ்சிரம் வறுவல் பொதுக்குழுவில் கமகம விருந்து
ADDED : டிச 11, 2025 03:45 AM
சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும் பொதுக்குழு என்பதால், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்க, 8000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் வந்தவர்களும், பொதுக்குழு மண்டபத்திற்குள் சென்றதால், நுழைவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். சிலர் மயக்க மடைந்தனர்
பொதுக்குழுவுக்கு வந்த அனைவருக்கும், சீரகச்சம்பா மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், சிக்கன் 65, முட்டை மசாலா, தாளிச்சா, பிரட் அல்வா, பருப்பு பாயாசம், சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, கத்தரிக்காய் கட்டா என, அசைவ உணவு பரிமாறப்பட்டது
இது தவி ர, 2,000 பேருக்கு வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, பருப்பு வடை என, 18 அயிட்டங்களுடன், சைவ உணவு பரிமாறப்பட்டது
காலை உணவாக 3,000 பேருக்கு இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானோர் சாப்பிடாததால், காலை உணவு அதிக அளவில் வீணானது.
காலை 10:00 மணியிலிருந்து உணவு பந்தலில், அ.தி.மு.க.,வினர் அமர துவங்கினர். மதியம் 3:00 மணியை கடந்தும் உணவு பறிமாறப்பட்டது.
நுழைவு வாயிலில் இருந்து, அரங்கம் வரை அலங்காரமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார், தேங்காய்களை, பொதுக்குழுவிற்கு வந்தவர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்
பொதுக்குழுவுக்கு 12,000க்கும் அதிகமானோர் வந்ததால், கோயம்பேடில் இருந்து, திருவேற்காடு வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மாலை 4:00 மணி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
பொதுக்குழு அரங்கிற்கு வெளியே, 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். மண்டபத்திற்குள் தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

