பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: பிரியாணி கடைக்காரர் கைது
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: பிரியாணி கடைக்காரர் கைது
ADDED : ஆக 22, 2025 12:49 AM

சென்னை:மத மாற்றத்தை கண்டித்ததால், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கத்தை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த, கொடைக்கானலை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம், 45. மத மாற்றத்தை தடுத்ததால், மர்ம நபர்களால், 2019 பிப்., 5ல் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான், இந்த கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவு குற்றவாளிகளாக ஆறு பேர் அறிவிக்கப்பட்டனர்.
அவர்களில், மூவர் கைது செய்யப்பட்டனர். மற்ற மூவர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் தருபவர்கள் பற்றியும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், ஆம்பூர் பிரியாணி என்ற கடையை, இம்தாத்துல்லா, 35, நடத்தி வருகிறார். இவர், ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் என தெரிந்திருந்தும், அப்துல் மஜீத், ஷாகுல் ஹமீது, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இந்த குற்றத்திற்காக இம்தாத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.