பா.ஜ., - அ.தி.மு.க., மீண்டும் கூட்டணியா? எதுவும் நடக்கலாம் என்கிறார் சீனிவாசன்!
பா.ஜ., - அ.தி.மு.க., மீண்டும் கூட்டணியா? எதுவும் நடக்கலாம் என்கிறார் சீனிவாசன்!
ADDED : அக் 08, 2024 07:40 PM
திண்டுக்கல்:''அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது, பா.ஜ.,விற்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு திண்டுக்கல்லே சாட்சி. இங்கு கொலை, கொள்ளை அதிகமாக நடக்கிறது. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஸ்டாலின் துணை முதல்வரானார். இப்போது, உதயநிதி துணை முதல்வராகியுள்ளார். வரும் காலத்தில், இன்பநிதி துணை முதல்வராவார். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, ஆளுங்கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தேவையில்லாமல் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது.
நடிகர் விஜய் கட்சி துவங்கியதை வரவேற்கிறோம். மாநாட்டை தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, 16 அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் சேர்ந்து கொள்வர்.
கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார். ஆனால், கூட்டணி அமையும் பட்சத்தில் அதை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வது தான் ஜனநாயக கடமை. அனைவரும் சேர்ந்தால் தான் ஓசை எழுப்ப முடியும்.
இவ்வாறு கூறினார்.
பா.ஜ., உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு,''ஜோதிடம் சொல்ல முடியாது; தேர்தல் வரும் போது, அது குறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது, பா.ஜ.,விற்கு நாங்கள் எதிரி; அடுத்த 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என்றார் சீனிவாசன்.