30 தொகுதிகளில் பா.ஜ., போட்டி இரட்டை இலக்க வெற்றிக்கு இலக்கு
30 தொகுதிகளில் பா.ஜ., போட்டி இரட்டை இலக்க வெற்றிக்கு இலக்கு
UPDATED : ஆக 12, 2025 04:47 AM
ADDED : ஆக 12, 2025 04:01 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., 25 - 30 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
இந்த சூழலில், சென்னை கமலாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கான மாநில அமைப்பு பயிற்சி முகாமில் பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் பங்கேற்று, பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
பின், முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேசியுள்ளதாவது:
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பணியை மேலிடம் மேற்கொண்டு வருவதால், கட்சியினர் இதில் கவனம் செலுத்த வேண்டாம்.
கட்சியினர் தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்திக்க வேண்டும்; அவர்கள் குறைகளை கேட்டு, அதை களைய முயற்சி எடுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க.,வினரிடம் எவ்வித நெருடலும் இல்லாமல் உறவை தொடர வேண்டும்.
அப்போது தான், அ.தி.மு.க.,வினரும் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவர். இரு கட்சியினரும், தங்கள் பகுதியில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் இணைந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு சந்தோஷ் பேசியுள்ளதாக தெரிகிறது.