மதுக்கடையில் முதல்வர் படம் பா.ஜ., கவுன்சிலரால் பரபரப்பு
மதுக்கடையில் முதல்வர் படம் பா.ஜ., கவுன்சிலரால் பரபரப்பு
ADDED : மார் 19, 2025 11:05 PM

பல்லடம்:'இது அப்பா கடை' என்ற வாசகத்துடன், பல்லடம் அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டிய பா.ஜ., நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் முறைகேடு என்று கூறி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இதனால், அடுத்த ஒரு வாரத்துக்குள், தேதி குறிப்பிடாமல், அனைத்து டாஸ்மாக் கடைகளில் மகளிர் அணியினர் முன்னிலையில், முதல்வரின் போட்டோவை ஓட்டுவோம் என்று கூறினார்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் - வடுகபாளையம் மதுக்கடையில், நேற்று மாலை, பா.ஜ., தரவு தள மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சசிரேகா சென்றார். கடை முன், 'இது அப்பா கடை' என்ற வாசகத்துடன் கூடிய முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டினார்.
இது குறித்து, சசிரேகா கூறுகையில், ''மாநில தலைவர் உத்தரவின்படி, 'டாஸ்மாக்' மதுக்கடையில், முதல்வர் படத்தை மாட்டேன். இதேபோல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் போட்டோ உள்ளது. ஆனால், மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டத் தரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மட்டும் அவரது போட்டோ இல்லை என்பதால், முதல்வரின் போட்டோவை இங்கு மாட்டியுள்ளோம்,'' என்றார்.