ADDED : ஜன 05, 2025 03:06 AM
சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, கவர்னர் ரவியிடம், தமிழக பா.ஜ., மகளிரணியினர் மனு அளித்தனர்.
முன்னாள் கவர்னர் தமிழிசை தலைமையில், நடிகை குஷ்பு, எம்.எல்.ஏ., சரஸ்வதி, தமிழக பா.ஜ., மகளிரணி தலைவர் உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி, ராதிகா உள்ளிட்டோர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று இரவு 7:00 மணியளவில் கவர்னரை சந்தித்தனர்.
பின், தமிழிசை அளித்த பேட்டி:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தி.மு.க., அரசு உண்மைகளை மறைக்க முயற்சிப்பதை, கவர்னர் ரவியிடம் தெரிவித்தோம்.
மாணவி புகாரில் கூறிய, 'யார் அந்த சார்?' என்பதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொடூரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளது. தமிழக பல்கலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
அப்போதுதான், இந்த விஷயத்தில் முழு உண்மையும் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.
தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் என்பதால், என்னதான் அவர்கள் விசாரணையில் முழுமையான விபரங்களைக் கண்டறிந்தாலும், அதை அப்படியே வழக்கில் கொண்டுவர முடியுமா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.