அ.தி.மு.க.,வை அழிக்க துடிக்கும் பா.ஜ.,: திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
அ.தி.மு.க.,வை அழிக்க துடிக்கும் பா.ஜ.,: திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 14, 2025 05:44 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
தி.மு.க.,விற்கு இன்னொரு கட்சி முட்டுக் கொடுக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவுக்கு தி.மு.க., பலவீனமாக இல்லை.
ஆசை வார்த்தை
தனிப்பட்ட முறையில் தி.மு.க.,வை எதிர்த்து பேசுகின்றனர் என்றால், அதை தி.மு.க.,வே எதிர்கொள்ளும். ஆனால், தி.மு.க.,வும், வி.சி.,யும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கின்றனர் என்றால், அதை நாங்கள் சும்மா விட மாட்டோம்.
என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து, தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டு காய் நகர்த்தினர். 'தி.மு.க., கூட்டணியில் கொடுத்ததைக் காட்டிலும் கூடுதலாகத் தொகுதிகள் தருகிறோம்; ஆட்சியில் பங்கு தருகிறோம். தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள்' என, அ.தி.மு.க., தரப்பில் பலமுறை ஆசை காட்டினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடமளித்தது இல்லை. அசைத்து பார்த்தனர்; அசைக்க முடியவில்லை. அப்படியெல்லாம் ஊசலாட்டத்தில் இருக்கும் கட்சி வி.சி., அல்ல.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி என்கின்றனர். ஆனால், கூட்டணியை அமித் ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அ.தி.மு.க.,வை பழனிசாமி தான் தலைமை தாங்கி நடத்துகிறார் என்றால், அவர் தானே கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.
அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக செயல்படுகிறார் என எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.,வுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.
தேய வைக்கும் முயற்சி
அது, தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; அம்பேத்கர், ஈ.வெ.ரா., அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதுதான். சமூக நீதி அரசியலை ஒழித்து, சிதறடித்து விட வேண்டும் என முனைப்பாக செயல்படுகிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தல் சவாலாகத்தான் இருக்கும். அ.தி.மு.க., கூட்டணியில், அக்கட்சியின் ஓட்டுக்களை பெற்று, அதை தன் ஓட்டாகக் காட்டி, அ.தி.மு.க.,வை மெல்ல மெல்ல தேய வைப்பதற்கான அனைத்து முயற்சியையும் பா.ஜ., செய்யும்.
பெரிய திராவிட இயக்கமான அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் பா.ஜ., அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.,வை யும் வீழ்த்தத் துடிக்கிறது.
ஓட்டுமொத்தமாகப் ஈ.வெ.ரா.,வின் அரிச்சுவெடிகளை அழித்து விட முடியும் எனக் கணக்கு போடுகின்றனர். அதற்கு வி.சி., இடம் கொடுக்காது.
தி.க.,வும், தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கிகள். அதில் வி.சி.,யும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கிகளாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

