பெங்களூரில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை நடத்த பா.ஜ., திட்டம்! ஊழல் புகாரில் சிக்கிய சித்தராமையாவுக்கு நெருக்கடி தர வியூகம்
பெங்களூரில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை நடத்த பா.ஜ., திட்டம்! ஊழல் புகாரில் சிக்கிய சித்தராமையாவுக்கு நெருக்கடி தர வியூகம்
ADDED : ஜூலை 24, 2024 11:52 PM

பெங்களூரு, :   மைசூரு நகர வளர்ச்சி ஆணைய மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை கண்டித்து, பெங்களூரில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, இந்த பாதயாத்திரையை நடத்தவும் பா.ஜ., தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு மற்றும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த மனைகள் ஒதுக்கீடு முறைகேடு அரசியலில் சூறாவளியை கிளப்பியுள்ளது. வால்மீகி ஆணையத்தின் 87 கோடி ரூபாய், சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பண பரிமாற்றம்
இந்த பணம் பல்லாரி லோக்சபா தொகுதி தேர்தலுக்கு செலவிட்டிருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமானது. இதனால், நாகேந்திரா அமைச்சர் பதவியை பறிகொடுத்தார். தற்போது கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'நிதித் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் சித்தராமையாவின் பார்வைக்கு வராமல், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் பண பரிமாற்றம் நடந்திருக்காது. எனவே, அவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., போர்க்கொடி உயர்த்தியது.
முதலில் ஆணையத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, கூறி வந்த சித்தராமையா, அதன்பின் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டார். இதற்கும், அரசுக்கும் தொடர்பில்லை. அதிகாரிகளால் தவறு நடந்துள்ளதாகவும் முதல்வர் கூறுகிறார்.
இதற்கிடையில், மைசூரு நகர வளர்ச்சி ஆணையமான, 'மூடா'வில், முதல்வரின் மனைவி பெயரில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை வைத்து, முதல்வர் சித்தராமையாவை நெருக்கடியில் சிக்க வைக்க, பா.ஜ., வியூகம் வகுத்துள்ளது.
மூடா முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, மைசூரில் பா.ஜ., ஏற்கனவே போராட்டம் நடத்தியது. போராட்டத்தை தடுக்க காங்கிரஸ் அரசு முயற்சித்தது. எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட முக்கிய தலைவர்கள், போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில், வழியிலேயே தடுத்து நிறுத்த முயற்சித்தது.
ஆனால் பா.ஜ., தலைவர்கள், அரசின் திட்டத்தை அறிந்து, போலீசாரின் கண்களில் மண்ணை துாவி, கூட்ஸ் வாகனத்தில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
நெருக்கடி
'மூடா' விஷயத்தை அஸ்திரமாக பயன்படுத்தி, முதல்வர் சித்தராமையாவை நெருக்கடியில் சிக்க வைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை நடத்த தயாராகின்றனர்.
'சட்டசபை கூட்டம் முடிவதற்குள், முதல்வர் சித்தராமையா, ராஜினாமா முடிவை அறிவிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. அவர் ராஜினாமாவை அறிவிக்கா விட்டால், சட்டசபை முடிந்த பின், ஜூலை 29ல் பெங்களூரில் இருந்து மைசூரு வரை, 120 கி.மீ., பாதயாத்திரை நடத்துவது, பா.ஜ.,வின் திட்டமாகும்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் அமைச்சர் சுனில்குமார் உட்பட முக்கிய தலைவர்களின் தலைமையில் பாதயாத்திரை நடக்கும். பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பட்டணா, மாண்டியாவின் உட்புற ரோடுகள் மூலமாக மைசூரை அடைய திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், பாதயாத்திரை நடத்துவது புதிய விஷயமல்ல. கடந்த 2010, ஜூலையில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில், பா.ஜ.,வின் ரெட்டி சகோதரர்கள் மீது, காங்கிரசின் தினேஷ் குண்டுராவ் சட்டவிரோத சுரங்கத்தொழில் குற்றச்சாட்டை சுமத்தினார்.
இது சபையில் காரசார வாக்குவாதத்துக்கு காரணமானது. அன்றைய ஆளுங்கட்சியான பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு, தினேஷ் குண்டுராவிடம், 'தைரியம் இருந்தால் பல்லாரிக்கு வாருங்கள் பார்த்து கொள்கிறேன்' என, சவால் விடுத்தார்.
அப்போது கொதித்தெழுந்த சித்தராமையா, 'பல்லாரிக்கு வருகிறோம். ரெட்டி வீட்டு முன்பாகவே ஊர்வலம் நடத்துவோம்' என, பதிலுக்கு சவால் விடுத்தார். அதன்படியே சித்தராமையா தலைமையில், பல்லாரிக்கு காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியது.
சித்தராமையா நடனமாடியபடி பாதயாத்திரை செய்ததை, பா.ஜ., இப்போதும் கிண்டல் செய்கிறது. பல்லாரி பாதயாத்திரையால் சித்தராமையாவின் செல்வாக்கு அதிகரித்தது. 2013ல் அவரை முதல்வர் பதவியிலும் அமர்த்தியது.
அதேபோன்று, மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, சிவகுமாரும் பாதயாத்திரை நடத்தினார். இப்போது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, அதே பாதயாத்திரை அஸ்திரத்தை, பா.ஜ., கையில் எடுத்துள்ளது.

