அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி
அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி
ADDED : ஜூலை 05, 2025 02:43 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அஜித்குமார் குடும்பத்தினரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி கட்சி சார்பாக ரூ.5 லட்சம் வழங்கினார்.
அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 23 லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது. 24 வதாக போலீசாரால் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்படை இரண்டு நாளாக அடித்து, உதைத்ததில் மூளையில் ரத்தக் கசிவு, உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கொடூரத் தாக்குதலுக்கு காரணம் என்ன.
இந்த பிரச்னையை பா.ஜ., தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. இந்த குடும்பத்திற்கு அரசு உதவி செய்தது வேலை வழங்கியது, 7 கி.மீ., தள்ளி பட்டா வழங்கியது கண்துடைப்பு. முதல்வர் கண்டு கொள்ளவில்லை. இது மன்னிக்க முடியாத தவறு. பிரேத பரிசோதனை அறிக்கை கூட இதயத்தில் பாதிப்பு இருப்பதாக சொல்வதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு பாதுகாப்பு இல்லை.
புகார் அளித்த நிகிதா அண்ணாமலையோடு எடுத்த புகைப்படம் வைரலாவது குறித்து தெரியாது. பெரிய தலைவர்களோடு படம் எடுப்பவர்களின் பின்புலம் என்ன என்பது தலைவர்களுக்கு தெரியாது.
ஞானசேகரன் வழக்கு மட்டும் 5 மாதங்களில் முடித்தது எப்படி. இதுபோன்ற வழக்கையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.