ராமர் கோயிலை காட்டி மக்களை திசை திருப்ப பா.ஜ., முயற்சி முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ராமர் கோயிலை காட்டி மக்களை திசை திருப்ப பா.ஜ., முயற்சி முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஜன 26, 2024 02:34 AM
சென்னை:''லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ. அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: பா.ஜ. ஹிந்தியை திணிப்பதற்கு காரணம் ஹிந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்கு தான். அக்கட்சிக்கு வட மாநில மக்கள் அதிகம் ஓட்டளிக்கின்றனர். ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கும் அக்கட்சி எதுவும் செய்யவில்லை.
மத்திய பா.ஜ. அரசு. தற்போது ராமர் கோயிலை காண்பித்து மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்.
தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் 'ஹிந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ. என்பதை அம்பலப்படுத்துவோம்' என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதை எல்லாரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.
இந்தியாவை காக்க பா.ஜ.வின் தோல்விகளை தமிழ் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம். பா.ஜ. தோல்விகளை பட்டியலிட்டால் 2014ல் 414 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது 918 ரூபாய்.
ஒரு லிட்டர் டீசல் விலை 72 ரூபாயாக இருந்தது. தற்போது 102 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டர் 55 ரூபாயில் இருந்து 94 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வளவு நாள் பா.ஜ.வுடன் இருந்து அவர்களின் மக்கள் விரோத செயலுக்கு ஆமாம் சாமி போட்டவர் பழனிசாமி என்றார்.

