கருங்கல் ஜல்லி, 'எம் சாண்ட்' விலை மீண்டும் உயர்கிறது
கருங்கல் ஜல்லி, 'எம் சாண்ட்' விலை மீண்டும் உயர்கிறது
ADDED : நவ 30, 2024 08:04 AM

சென்னை: ஜல்லி, எம் சாண்ட் தயாரிப்புக்காக கருங்கல் உள்ளிட்ட பொருட்களை வெட்டி எடுக்கும் போது, அதற்கான உரிமத்தொகையை குவாரி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதை காரணமாக வைத்து, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், எம் சாண்ட், கருங்கல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் உயர்த்தினர். இதன்படி, கருங்கல் ஜல்லி, 'வெட் மிக்ஸ்' ஆகியவற்றின் விலை ஒரு யூனிட் அதாவது, 100 கன அடி, 2,000த்தில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதேபோன்று, எம் சாண்ட் விலை யூனிட், 3,000த்தில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன் போக்குவரத்து செலவுக்காக, லோடுக்கு கூடுதலாக, 1,000 ரூபாய் விலையில் சேர்க்கப்பட்டது.
தற்போது, மீண்டும் கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் விலையை நாளை முதல் உயர்த்தப் போவதாக, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தமிழக தலைவர் பா.பழனிவேல் கூறும்போது, 'கடந்த ஆண்டு தான் விலை உயர்த்தப்பட்டது என்பதால், தற்போதைய விலை உயர்வை அனுமதித்தால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும். அரசு மற்றும் கட்டுமான திட்டப்பணிகள் பாதியில் முடங்கும்.
ஏற்கனவே பணம் செலுத்திய மக்கள், திட்டமிட்டபடி வீடு பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, அரசு தலையிட்டு, இந்த விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என, தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்' என்றார்.
இதுபேதால, விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.