வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு; த.வெ.க., - மா.செ., மீது புகார்
வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு; த.வெ.க., - மா.செ., மீது புகார்
ADDED : டிச 26, 2025 02:41 AM

கிருஷ்ணகிரி: தர்மபுரி அருகே பாறைகளுக்கு வெடி வைத்ததாக, த.வெ.க., மாவட்ட செயலர் மீது அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பழைய இண்டூர் அடுத்த கோணக்குளம் பகுதியில், மண்டு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இதன் அருகே, கர்நாடகா, கேரளாவுக்கு உயர் மின்கோபுர பாதைகள் செல்கின்றன. அருகருகே மின் பாதைக்கான டவரும் உள்ளது.
இப்பகுதியில், கடந்த வாரம், பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. கோவில் நிலத்தில் வெடி வைத்து தகர்த்துள்ளதாகவும், உயர் மின்கோபுர பாதை செல்லும் பகுதியில் இருந்து, 300 மீட்டர் துாரத்திற்கு நிலத்தில் வெடி வைக்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இப்பகுதியில் பாறைகளுக்கு வெடி வைத்ததாக, தர்மபுரி, த.வெ.க., மாவட்ட செயலர் சிவாவுக்கு எதிராக அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மின்கோபுரம் சாய்ந்தால் அருகிலுள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி, அவர் மீது கனிம வளப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக, மக்கள் புகார் தெரிவித்தனர்.
த.வெ.க., மாவட்ட செயலர் சிவா கூறுகையில், ''என் நிலத்தை சமன் செய்யும் பணி மட்டுமே நடந்தது. தி.மு.க.,வினர் வேண்டுமென்றே என் மீது பழி போடுகின்றனர். விசாரணையில் உண்மை தெரியும்,'' என்றார்.
தர்மபுரி மாவட்ட க னிம வளப்பிரிவு துணை இயக்குநர் ஈஸ்வரன் கூறுகையில், ''எங்களுக்கு புகார் வந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

