சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
UPDATED : மே 15, 2025 01:11 PM
ADDED : மே 15, 2025 07:32 AM

கடலூர்: கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில், பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்ததால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென டேங்கர் வெடித்ததுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் அவதி அடைந்து வருகிறோம் என கடலூர்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.