மருதுசேனை அமைப்பின் தலைவர் கார் மீது குண்டு வீச்சு; துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி
மருதுசேனை அமைப்பின் தலைவர் கார் மீது குண்டு வீச்சு; துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி
ADDED : மார் 14, 2024 11:56 PM

திருமங்கலம் : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் 53, மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதோடு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவும் முயற்சி நடந்தது.
கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அறிவித்துள்ளார். இவரது அலுவலகம் கள்ளிக்குடியில் உள்ளது. நேற்று மதியம் அங்கிருந்து வீட்டிற்கு 6 பேருடன் காரில் சென்றார். நான்கு வழிச்சாலையில் இருந்து மையிட்டான் பட்டிக்கு செல்லும் ரோட்டில் திரும்பியபோது எதிர் திசையில் வந்த கார் மோதியது. அதிலிருந்தவர்கள் பெட்ரோல் குண்டை ஆதிநாராயணன் கார் மீது வீசியபோது அது தரையில் விழுந்தது. மற்றொரு குண்டை வீசும்போதே வெடித்தது.
இதை பயன்படுத்தி காரை பள்ளத்தில் விட்டுவிட்டு ஆதிநாராயணன் உள்ளிட்டோர் வயல்வெளி வழியாக தப்பினர்.
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் தங்களது காரை நிறுத்தி 10 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஏ.டி.எஸ்.பி., கமலக்கண்ணன், டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் சமரசம் செய்தனர்.
பின்னர் நேற்று மாலையில் கப்பலுார் டோல்கேட்டில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆதிநாராயணன் கூறுகையில் ''டிரைவர் வேகமாக ஓட்டியதால் கார் மீது குண்டு விழவில்லை. எதிரே வந்த காரில் இருந்த ஒருவர் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். காரை வேகமாக இயக்கியதால் குண்டு என் மீது படாமல் தப்பினேன்'' என்றார்.

